சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு


புதிய தலைமைச் செயலகம், மீனவர்கள் எதிர்ப்பு, சென்னை பட்டினப்பாக்கம்
படக்குறிப்பு, சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு தேர்வு செய்துள்ள இடமும், எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவப் பெண்களில் ஒருவரான கிரிஜாவும்.

“எங்களில் ஒருவராக நினைத்து தான் விஜய்க்கு ஓட்டுப் போட்டோம். பரந்தூரில் விவசாயிகளுக்கு நிலம் முக்கியம் எனக் கூறி அதனை மீட்டுக் கொடுத்தார். மீனவர்களுக்கும் கடல் இருந்தால் தான் வாழ முடியும். எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது”

“புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுவிட்டால் நாங்கள் எல்லாம் குப்பையாக தூக்கி எறியப்படுவோம்”

“நள்ளிரவு நேரங்களில் மீன் பிடிப்பதற்குக் கடலுக்குச் செல்கிறோம். புதிய தலைமைச் செயலகம் வந்தால் சொந்த ஊரில் அகதிகளாக மாறிவிடுவோம்”

– சென்னை பட்டினப்பாக்கம் மீனவர்களின் ஆவேசம் கலந்த வார்த்தைகள் இவை. அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வலுக்கவே, “மீனவர்களிடம் பேசி அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்” என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் – சட்டப்பேரவையில் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 3 ஆம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும் திறன்மிக்க நிர்வாகத்துக்கும் ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம் கட்டுவது இன்றியமையாதது எனக் கூறிய முதலமைச்சர், 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளதாக அறிவித்தார்.

தமிழ்நாடு, புதிய தலைமைச் செயலக கட்டடம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசு, பிபிசி தமிழ் களஆய்வு

பட மூலாதாரம், BBC News tamil

அதற்கான காரணங்களையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பட்டியலிட்டார். “பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் 1640 ஆம் ஆண்டு வணிக செயல்பாட்டு மையத்துக்காக நிலம் வாங்கப்பட்டது. அதில், 1644 ஆம் ஆண்டு புதிய ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1652 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரபூர்வ தலைமை இடமாக அது இருந்தது” என்றார் அவர்.

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக அது தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், “ஏறத்தாழ 400 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாகவும் மாநிலத்தின் ஆட்சி பாரம்பரியத்தின் அடையாளமாகவும் இருந்து வருகிறது” என்று விஜய் குறிப்பிட்டார்.

“சுமார் 107 ஏக்கர் உள்ள வளாகத்தில் தலைமைச் செயலக பயன்பாட்டுக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.

“இதன் காரணமாக வளாகத்தை மேம்படுத்தவோ விரிவுபடுத்தவோ முடியவில்லை” என்று கூறிய முதலமைச்சர் ஜோசப் விஜய், “தற்போது இரண்டு கட்டடங்களில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது” என்கிறார்.

2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட ஜோசப் விஜய், “ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் பின்னர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது” எனக் கூறினார்.

“புனித ஜார்ஜ் கோட்டையில் கூடுதல் கட்டுமான பணிகளைப் மேற்கொள்ள முடியவில்லை” எனக் கூறிய அவர், “தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம் இன்றியமையாதது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு, புதிய தலைமைச் செயலக கட்டடம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசு, பிபிசி தமிழ் களஆய்வு

பட மூலாதாரம், BBC News tamil

அரசாணைக்கு எதிர்ப்பு

முதலமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு செப்டம்பர் 8 ஆம் தேதி அரசாணை ஒன்றை பொதுத்துறை (கட்டடங்கள் பிரிவு) வெளியிட்டது. அதில், மயிலாப்பூர் நகரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறைக்குச் சொந்தமான 25.55 ஏக்கர் நிலத்தில் தலைமைச் செயலக கட்டடம் கட்டலாம் எனக் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த சர்வே எண்கள் பட்டினப்பாக்கம் பகுதிக்குள் வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி தி.மு.க, அ.தி.மு.க மற்றும் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசாணை வெளியான நாளில் இருந்தே தமிழ்நாடு அரசுக்கு எதிராக பட்டினப்பாக்கத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 12 ஆம் தேதி அப்பகுதியில் போராட்டம் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) சென்னையைச் சுற்றியுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பட்டினப்பாக்கத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். ‘பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது’ எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள இடத்தின் சர்வே எண்களில் மீனவ மக்களின் முன்னோர் வாழ்ந்து வந்ததாகக் கூறுகிறார், தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் பாரதி.

“காலியாக உள்ள சுமார் 25 ஏக்கர் நிலத்தில் மீனவ மக்களுக்கு குடியிருப்புகளைக் கட்டித் தருமாறு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்னதாக கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் ஒன்றையும் மேற்கொண்டோம்” என்கிறார் அவர்.

கூட்டத் தொடர் முடியும் நேரத்தில் முதலமைச்சருக்கு இதுதொடர்பாக இமெயில் மூலமாக கடிதங்களை அனுப்பியதாகக் கூறும் அவர், ” ஆனால், நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ளதாகக் கூறி எங்கள் தலையில் இடியை இறக்கிவிட்டனர்” என்று அவர் கூறுகிறார்.

தமிழ்நாடு, புதிய தலைமைச் செயலக கட்டடம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசு, பிபிசி தமிழ் களஆய்வு

பட மூலாதாரம், BBC News tamil

படக்குறிப்பு, பாரதி

எந்தெந்த கிராமங்களில் பாதிப்பு?

புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், முள்ளிமா நகர், நம்பிக்கை நகர், பவானி குப்பம், ராஜீவ்காந்தி நகர், செல்வராஜ் குப்பம், டொமிங் குப்பம், நொச்சி நகர் ஆகிய மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன.

“ஒவ்வொரு கிராமத்திலும் பைபர் படகுகள், மீன்பிடி கருவிகள் எனப் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இரவு 12 மணிக்கு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அரசின் அறிவிப்பால் சுதந்திரமாக நடமாடுவது தடுக்கப்படலாம்” என்கிறார் பாரதி.

அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 25.55 ஏக்கர் அரசு நிலத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் பட்டினப்பாக்கம் பேருந்து முனையம் உள்ளது.

“சுற்றுச்சுவரில் இருந்து சற்று தொலைவில் மீனவ கிராமம் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் எனக் கூறுவது சரியா?” எனக் கேட்டோம்.

“தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் கொடியேற்றும் போது நொச்சிக்குப்பம் முதல் முள்ளிக்குப்பம் வரையில் மீன் பிடிக்கக் கூடாது என அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்கின்றனர். புதிய தலைமைச் செயலகம் வந்தால் எங்கள் நிலைமை என்ன ஆகும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் பாரதி.

இதே கருத்தை முன்வைக்கும் முள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜி.ஆர்.விஜயன், “எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த இடத்தில் நாங்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. வீட்டைவிட்டு வெளியே வந்தால் காவல்துறை இடையூறு செய்யும். சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் நிலை ஏற்படும்” என்கிறார்.

‘எங்கள் உயிரே இந்த இடம் தான்’ – மீனவ பெண்கள்

தமிழ்நாடு, புதிய தலைமைச் செயலக கட்டடம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசு, பிபிசி தமிழ் களஆய்வு

பட மூலாதாரம், BBC News tamil

படக்குறிப்பு, லதா

பட்டினப்பாக்கத்தைச் சுற்றிலும் ஏராளமான பெண்கள் மீன் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

“புதிய தலைமைச் செயலகம் வந்துவிட்டால் எங்களை அகற்றிவிடுவார்கள்” என்று அஞ்சுகிறார், சீனிவாசபுரம் பகுதியில் வசிக்கும் லதா. இவர் சுமார் 20 ஆண்டுகளாக இப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

“எங்களில் ஒருவராக நினைத்து விஜய்க்கு ஓட்டுப் போட்டோம். பரந்தூரில் விவசாய நிலம் அவசியம் எனக் கூறி அங்குள்ள விவசாயிகளுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுத்தார். மீனவர்களுக்கு கடல் இருந்தால் தான் வாழ முடியும்” என்கிறார் அவர்.

“எங்கள் உரிமையை விட்டுக் கொடுத்து எங்கே போய் நிற்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பிய லதா, “எங்கள் உயிரே இந்த இடம் தான். எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடம் இது.” எனக் கூறுகிறார்.

புதிய தலைமைச் செயலகம், மீனவர்கள் எதிர்ப்பு, சென்னை பட்டினப்பாக்கம்
படக்குறிப்பு, கிரிஜா

மீனவ பெண்கள் மத்தியில் அரசின் மீதான கோபம் இருப்பதைப் பார்க்க முடிந்தது. “இதுவரை ஆண்ட அரசியல் கட்சிகள் எதுவும் காலியாக உள்ள இடத்தில் (அரசாணையில் கூறப்படும் நிலம்) கை வைக்கவில்லை. இவர்கள் ஏன் இவ்வாறு செயல்பட வேண்டும்?” எனக் கேள்வி எழுப்புகிறார், முள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த கிரிஜா.

“மீனவர்களுக்கு நல்லது செய்வார் என்று தான் த.வெ.கவுக்கு வாக்களித்தோம். சுனாமி வந்தபோது கூட உயிர் போனாலும் பரவாயில்லை என்று இங்கே தான் இருந்தோம். புதிய தலைமைச் செயலகம் வருவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார் அவர்.

‘பறிபோகும் விளையாட்டு மைதானம்’

தமிழ்நாடு, புதிய தலைமைச் செயலக கட்டடம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசு, பிபிசி தமிழ் களஆய்வு

பட மூலாதாரம், BBC News tamil

அரசாணையில் குறிப்பிடப்படும் சர்வே எண்கள் அமைந்துள்ள நிலப்பரப்புக்கு பிபிசி தமிழ் சென்றது. அங்கு பயன்பாட்டில் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளைப் பார்க்க முடிந்தது. நிலத்தின் மையப்பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்று அமைந்துள்ளது.

ஏராளமான இளைஞர்களுக்கு பிரதான விளையாட்டுத் திடலாக இது உள்ளதாக பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் சுரேஷ் கூறினார்.

“புதிய தலைமைச் செயலகம் வந்தால் மீனவர்கள் மட்டுமல்லாமல் விளையாட்டில் ஈடுபாடு உள்ள இளைஞர்களும் பாதிப்படைவார்கள்” என்கிறார் அவர்.

தவிர, பட்டினப்பாக்கத்தைச் சுற்றிலும் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. “பள்ளி நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும். சட்டப்பேரவை அமைந்தால் கூடுதல் நெருக்கடி ஏற்படும்” என்கிறார் சுரேஷ்.

புதிய தலைமைச் செயலகம், மீனவர்கள் எதிர்ப்பு, சென்னை பட்டினப்பாக்கம்
படக்குறிப்பு, சுரேஷ்

அரசின் அறிவிப்புக்கு எதிராக மீனவ மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தாலும் அவர்களிடம் அரசுத் தரப்பில் இருந்து எந்தப் பேச்சுவார்த்தையும் இதுவரை தொடங்கப்படவில்லை.

தமிழக அரசு தரப்பில் கூறப்படுவது என்ன?

“இந்த விவகாரத்தில் மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும்” என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

” இது ஒருமுறை செய்யப்படுகின்ற முதலீடு. ஒருங்கிணைந்த கட்டடத்தில் இருந்து அமைச்சர்களும் அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும் என்பது முதலமைச்சரின் நோக்கம்” எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் விமர்சனத்துக்குப் பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், “பழைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்ததையே நாம் செய்கிறோம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அவ்வாறு தான் வைப்பார்கள். தேவையைக் கருத்தில் கொண்டே கட்ட உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை மீனவர்கள் முன்வைக்கின்றனர்.

இதற்குப் பதில் அளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், “தி.மு.க கட்டிய தலைமைச் செயலகக் கட்டம் சரியாக இல்லை என்பதால்தான் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது” என்கிறார்.

“தற்போதுள்ள சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் ஆகியவை 4.5 ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது. அதுபோதாது என்ற நிலையில்தான் புதிய தலைமைச் செயலகத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *