ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்… திமுக பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு!


திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்  நிராகரித்தது.

2026 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சீனிவாச சேதுபதி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். 

இதில் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்றார். அவரை விட முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஒரே ஒரு வாக்கு தான் குறைவாக பெற்றிருந்தார். 

இந்த நிலையில் சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த மனுவில், ”சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் தான் நான் தோல்வி அடைந்துவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார். 

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி சீனிவாச சேதுபதி மனு தக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், ”தொகுதிகள், ‘ எண்’ அடிப்படையில் மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. பெயர் அடிப்படையில் அல்ல. 

தபால் வாக்குகள் கவர்களில் தொகுதி எண், பெயர், மாவட்டம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். 

எனவே ஒரு தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் வழக்கில் கூறியுள்ளதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் சீனிவாச சேதுபதியின் நிராகரிப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

அதன்படி இன்று (செப்டம்பர் 28) தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவை ஏற்று திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *