சென்னை: தமிழகத்தில் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை தற்போது வரை வரவு வைக்கப்படாததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பயனாளிகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் வயது முதிர்ந்து, உழைக்க வழியின்றி வறுமையில் வாடும் முதியோர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி 60 வயதை கடந்த ஆதரவற்ற முதியோர், கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.1,200 உதவி தொகையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகையும் வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் பயனாளிகள் வங்கி கணக்கில் இந்த உதவி தொகை வரவு வைக்கப்படும். குறிப்பிட்ட சில பேருக்கு மட்டும் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் நடைமுறையும் உள்ளது.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்த பிறகு மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை வரவு வைப்பதில் மாதந்தோறும் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை இந்த மாதம் 5ம் தேதிக்குள் வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் 10ம் தேதியை கடந்தும் பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக கல்வி, பொருளாதரத்தில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் 1,71,621 பயனாளிகள் உதவித்தொகை திட்டத்தில் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது வரை அவர்கள் வங்கி கணக்கில் உதவித்தொகை தமிழ்நாடு அரசு வரவு வைக்காததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல திருச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் 81,159 பேர், திருவாரூரில் 60,500 பேர், புதுக்கோட்டையில் 14,500 பேர், மயிலாடுதுறையில் 72,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழகத்தில் 5 லட்சம் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘மாதந்தோறும் அரசு வழங்கும் உதவித்தொகையை நம்பியே அன்றாட செலவு, உணவு உள்ளிட்டவைகளை நம்பி இருக்கிறோம். ஆனால் தற்போது வரை உதவித்தொகை வரவு வைக்கப்படவில்லை. தொடர் விடுமுறை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை நேரங்களில் எங்களிடம் பணம் இல்லாமல் நாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்’’ என்றனர்.
இது குறித்து விழுப்புர மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியரிடம் கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். அதன் பிறகு பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உதவித்தொகை இரண்டு கட்டமாக பிரித்து செலுத்தப்படும். ஆனால் தற்போது ஒரே கட்டமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்க உத்தரவிட்டனர்.
இதனால் பட்டியல்கள் சரி பார்ப்பதில் சில தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்’’ என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பயனாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
வருவாய் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த காலங்களில் தாலுகா அலுவலகம் மூலம் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் 2024ம் ஆண்டு முதல் சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து மாநிலம் முழுவதும் மொத்தமாக மாதத்தின் முதல் வாரத்தில் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சாப்ட்வேர் மாற்றும் பணி நடைபெற்று வருவதால் நடப்பு மாதத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
* மாதந்தோறும் அரசு வழங்கும் உதவித்தொகையை நம்பியே அன்றாட செலவு, உணவு உள்ளிட்டவைகளை நம்பி இருக்கிறோம். ஆனால் தற்போது வரை உதவித்தொகை வரவு வைக்கப்படவில்லை














Leave a Reply