“இந்தியாவுடன் விளையாடுவதால் ஒரு பைசா கூட லாபமில்லை”.. கொந்தளித்த வெஸ்ட் இண்டீஸ் நிர்வாக அதிகாரி | West Indies Cricket CEO says Playing With India Not giving them any money and slams ICC Revenue Distribution Model


மும்பை: தற்போது இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்தியாவுடன் விளையாடுவதால் தங்களுக்கு ஒரு பைசா கூட லாபமில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் டெஹ்ரிங் ஆதங்கத்துடன் கொந்தளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் பகிர்வு முறை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டைப் படுகுழியில் தள்ளிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விஸ்டன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய டெஹ்ரிங், “சர்வதேச கிரிக்கெட்டில் நிலவும் மிகப்பெரிய முரண்பாடு இதுதான். போட்டிகள் எங்கு நடந்தாலும், குறிப்பாக இந்தியாவில் ஒரு கிரிக்கெட் தொடர் நடக்கும் போது சுமார் 20 முதல் 30 மில்லியன் டாலர் வரை அசுர வருமானம் கொட்டுகிறது. ஆனால், அந்தத் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதில் இருந்து எதுவுமே கிடைப்பதில்லை. இதனால் எங்கள் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது” என்றார்.

West Indies Cricket CEO says Playing With India Not giving them any money and slams ICC Revenue Distribution Model

இந்த அநீதி 1997-ல் தொடங்கியது என சுட்டிக்காட்டிய அவர், “அப்போது ஐசிசி உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து வருவாய் பகிர்வு முறையை மாற்றின. 1997 வரை வெளிநாடுகளுக்குச் சென்று ஆடும் போது எங்களுக்குப் பயணக் கட்டணம் முறையாகத் தரப்பட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடி ஈட்டிய தொகையே எங்கள் கிரிக்கெட்டை வாழ வைத்தது. ஆனால் டிவி உரிமைகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததும், உள்நாட்டு வருமானத்தைத் தாங்களே முழுமையாக வைத்துக் கொள்ள பெரிய நாடுகள் முடிவு செய்தன. ஐசிசி கூட்டத்தில் 9-க்கு 1 என்ற வாக்கு கணக்கில் எங்களை வீழ்த்தி இந்த முறையைக் கொண்டுவந்தனர். அன்றே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு அவர்கள் கையெழுத்திட்டு விட்டனர்” என்றார்.

இந்தியா தனது 150 கோடி மக்கள் தொகையைக் கொண்டு மாபெரும் வர்த்தக லாபம் ஈட்டுகிறது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியோ வெறும் 100,000 மக்கள் தொகை கொண்ட ஆன்டிகுவா மற்றும் 30,000 பேர் மட்டுமே வாழும் செயிண்ட் கிட்ஸ் போன்ற குட்டி தீவுகளையே நம்பியுள்ளது. சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பணத்தை நம்பியிருக்கும் கரீபியன் பொருளாதாரத்தைப் போல, சர்வதேசப் போட்டிகளிலிருந்து போதிய வருமானப் பங்கீடு கிடைக்காவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் முழுமையாக அழிந்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.

Story first published: Friday, October 16, 2026, 12:30 [IST]

Other articles published on Oct 16, 2026



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *